நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது.
மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடினர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த கலர் குண்டை வீசியதால் அவை முழுவதும் மஞ்சள் நிற புகை பரவியது. இதனை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். அங்கு இருந்த சில எம்.பிக்கள் அந்த இரு மர்ம நபர்களை தைரியமாக பிடித்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் திடீரென்று நடைபெற்றவை அல்ல. இதுகுறித்து டெல்லி போலீசார் முன்பே மத்திய அரசுக்கு எச்சரித்து இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, காலிஸ்தான் பயங்கரவாதிகள் டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்பு நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த தகவலை மத்திய அரசிடம் தெரிவித்தும் அதன் தீவிரத்தை உணராமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய அரசு கோட்டை விட்டு இருக்கிறதா? என்ற கேள்வியும், விமர்சனமும் தற்பொழுது எழுந்து இருக்கிறது.
பலகட்ட சோதனைக்கு பிறகே ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும். அப்படி இருக்கையில் அனைத்து பாதுகாப்பையும் மீறி இருவர் நாடாளுமன்றத்திற்குள் கலர் குண்டுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறார்கள் என்றால் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கிறது என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுந்து இருக்கிறது.