இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.
ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் ஹெல்த் வாக் எனப்படும் உடல் நலத்தை சீராக்கும் நடைப்பயிற்சி துவங்க உள்ளதாகவும், அதற்கு 8 கிலோ மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்த 8 கிலோ மீட்டரான டிராக் ரேஸ் கோர்ட் சாலையில் தொடங்கி அத்திக்குளம் சந்திப்பு வரை இருக்கும். ஜப்பானுக்கு சென்றிருந்த போது இந்த டிராக் ரேஸ் கோர்ட் பார்த்து தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
மேலும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இது போன்ற ஹெல்த் வாக் டிராக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு இதய நோய் மற்றும் புற்று நோய் மிகுந்து காணப்படுகிறது.
எனவே இந்த வாக் டிராக்கை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாக் டிராக்கின் இருபுறங்களிலும் மரங்கள், செடிகள் நடப்படும்.
மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பலகைகள் நடப்படும். நடைப்பயிற்சி செய்வோர் ஓய்வெடுக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதார அதிகாரிகள் நடைப்பயிற்சி செய்வோரை ஊக்குவிக்கும் விதமாக வாக்கதான் போட்டிகளை நடத்துவர்.
இதன் மூலமாக இந்த ஹெல்த் வாக் டிராக் பிரபலமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.