கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், வருகின்ற ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக வருகின்ற ஒன்பதாம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மே மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மே 7ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மே 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம் என்றும் மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.