ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன்,பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.30 வருடங்களாக இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்தது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,ரவிச்சந்திரனிடம் ஏழு பேர் விடுதலை குறித்தான முடிவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும்,ஆளுநர் அந்த முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் அந்த வழக்கில் ரவிச்சந்திரன் 29 ஆண்டுகள் சிறையில் கழித்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மேலும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் மனிதநேய அடிப்படையில் விடுதலை வழங்கலாம் என கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கிற்கு பதிலளித்த நீதிமன்றம்,ஏழு பேர் விடுதலை தொடர்பான எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்க முடியாது எனவும் அவ்வாறு எடுக்கும்பட்சத்தில் அந்த முடிவுக்கு எதிராக மனுதாரர் வழக்கு தொடுக்கலாம் எனவும் நீதிபதி கூறினார்.இவ்வாறு கூறிய நீதிபதி இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
பல ஆண்டுகளாக ஏழு தமிழர்கள் விடுதலை குறித்தான விவாதங்களும் முன்னெடுப்புகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.தமிழக அரசும் ஏழு தமிழர்கள் விடுதலைக்கு துணையாக இருக்கிறது.ஆனால் இறுதி முடிவை குடியரசுத் தலைவர்தான் எடுக்க வேண்டும்.