தங்கம் வாங்குவது அழகு சேர்க்க அணியும் அணிகலன் என்பது மட்டுமின்றி இது ஒரு சிறந்த முதலீடாகும். பொதுவாக பண்டிகை காலங்களில் தங்கத்தை வாங்குவது அதிர்ஷ்டகரமானதாக பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்க வேண்டும் என்பது அனைவருக்கு தீராத ஒரு ஆசையாக இருந்து வருகிறது, தங்கத்தின் விலையும் தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது, இது சாமானிய மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இருப்பினும் தங்கம் வாங்காமல் எவரும் இல்லை, எதிர்காலத்தில் குடும்பத்தின் நிதி சவால்களை சமாளிக்க தங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தங்கத்தை அணிகலன்களாக மட்டுமின்றி நாணயங்கள், பார்கள் அல்லது காகித வடிவில் அல்லது தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகள், இறையாண்மை தங்கப் பத்திரங்கள் போன்ற வடிவங்களில் வாங்கலாம். நாம் தங்கம் வைத்திருப்பதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பது பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இதைப்பற்றி நாங்கள் இந்த பகுதியில் உங்களுக்கு சொல்கிறோம். நாட்டில் 1968ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டது, இந்த சட்டமானது மக்கள் அளவுக்கு அதிகமாக தங்கம் வைத்திருப்பதை தடை செய்தது, ஆனால் இந்த சட்டம் 1990ல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவில் தங்கத்தின் அளவிற்கு எந்த தடையும் இல்லை என்றாலும் தங்கம் வைத்திருப்பவர் சரியான ஆதாரம் மற்றும் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். திருமணமான பெண் 500 கிராம் வரை தங்க ஆபரணங்களையும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலான தங்க ஆபரணங்களையும் வைத்திருக்கலாம். தங்க முதலீட்டின் மீதான வரி நிர்ணயம், வைத்திருக்கும் காலம், அதாவது வரி செலுத்துவோர் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்தது.