Kerala Style : கேரளா ஸ்டைல் “தேங்காய்ப்பால் கொழுக்கட்டை” – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொழுக்கட்டை என்றால் இஷ்டம். இந்த கொழுக்கட்டை அரிசி மாவில் தயாரிக்கப்பட்டு தேங்காய் பாலில் ஊற வைத்து உண்ணுவதால் அதிக ருசியுடன் இருக்கிறது. இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை கேரளா மக்களின் விருப்ப இனிப்பு பண்டமாகும்.
தேவையான பொருட்கள்:-
*அரசி மாவு – 1 கப்
*தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
அரைக்க:-
*தேங்காய் துருவல் – 3/4 கப்
*சர்க்கரை – 3 தேக்கரண்டி
*ஏலக்காய் – 3
தேங்காய் பால் கொழுக்கட்டை செய்முறை:
ஒரு அகலமான பவுலில் 1 கப் அளவு பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கலந்து விடவும். பின்னர் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். பின்னர் இட்லி தட்டில் ஒரு காட்டன் துணி வைத்து அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் 3/4 கப் தேங்காய் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து 3 முதல் 4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பின்னர் 3 ஏலக்காயை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
அரசி கொழுக்கட்டை உருண்டை வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை ஒரு மண் சட்டியில் போட்டுக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கொழுக்கட்டை மூழ்கும் அளவிற்கு ஊற்றி ஊற விடவும். இந்த முறையில் செய்தால் தேங்காய் பால் கொழுக்கட்டை அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.