தமிழக சட்டமன்ற தேர்தல் மிக அருகில் உள்ள இந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்த அனைவரின் கவனமும் தேர்தல் வெற்றியை தாண்டி, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை குறித்தே தற்போது அதிக அளவில் உள்ளது.
ஆட்சிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் ஆகி இருவரில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதைப் பற்றி அண்மையில் மூத்த அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து கூட்டு அறிக்கையை வெளியிட்டு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஓபிஎஸ் அவர்களோ ஜெயலலிதா இருந்தபோது முதல்வராக இருந்தார்.ஆனால் தற்போது கட்சியில் நம்பர் 2 என்ற இடத்திலேயே இருந்து வருகிறார்.இப்படியே போனால் நம்பர் 2 என்ற இடத்திலேயே இருந்து விடுவோமோ என்ற அச்சம் இருப்பதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருக்கிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கண்டிப்பான வெற்றி கிடைக்கும் என்ற அரசியல் எதார்த்தத்தை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிப் பணியாற்றுவதற்காக தான் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கூறினார்.அதாவது தன்னை பொது செயலாளராக ஆக்கினால் முதல்வர் பதவியை இப்போதைக்கு கேட்க மாட்டேன் என்பதுதான் இதனுடைய பொருள் என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.
தற்போது ஓபிஎஸ் அவர்கள் ஆட்சியை நோக்கிய காய் நகர்த்தலை விட கட்சியை நோக்கிய காய்நகர்த்தல் சிறந்தது என்று எண்ணுகிறார் போலும். இதன் வெளிப்பாடே அன்றைய தினம் ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்’ என்றும் ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்றும் முழங்கியதற்கு காரணம் என்கிறார்கள்.
மேலும் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்துவதும் அப்பதவியை ஓ பன்னீர்செல்வம் ஏற்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் ஆழமான கருத்தாக உள்ளது.இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் நடவடிக்கை தற்போது முதல்வர் பதவி வேண்டாம் என அவர் முடிவு எடுப்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.