பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!!
ரயில் பயணத்தின் போது சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் சத்தமாக பேசுதல், கூச்சலிடுதல் மற்றும் அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் பயணத்தின் போது பயணிகள் அவர்களின் மன மகிழ்ச்சிக்காக பாட்டு கேட்டு கொண்டே செல்வது வழக்கம். அதேபோல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில் தொலைபேசியில் சத்தமாக பேசுவதுண்டு. இதனால் உடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அதற்கு முறையான பதிலோ, தீர்வோ அதிகாரிகள் தரப்பில் இருந்து கிடைப்பதில்லை. இந்த நிலையில் இது அனைத்திற்கும் முடிவு கட்டும் வகையில் இந்திய ரயில்வே முடிவு செய்து புதிய விதியை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, இனி ரயில்களில் பயணம் செய்பவர்களில் சத்தமாக பாட்டுக் கேட்பதோ, அதிக சத்தம் போட்டு பேசுவதோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதை மீறி யாராவது சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மற்றும் அதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மேலும், மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரெயில் ஊழியர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே ரயில் ஊழியர்கள், ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டோர் பயணிகள் இன்னல்களை சந்திக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.