முதல்வர் மு.க. ஸ்டாலின், “பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசின் ஆன்மீக பணிகளை பாராட்டுகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
32 ஜோடிகளுக்கான இலவச திருமணம்
சென்னையின் ராஜா அண்ணாமலை மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர், ஒரு ஜோடியுக்குத் தலா நான்கு கிராம் தங்க தாலி மற்றும் ₹70,000 மதிப்புள்ள சீர்வரிசை வழங்கினார். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திராவிட அரசு சாதனைகள்
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 3,176 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதுடன், 997 கோவில்களின் 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், 6,000 கோவில்களுக்கு ₹6,000 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள், அதோடு பழமை வாய்ந்த 1,000 கோவில்களுக்கு ₹425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
அத்துடன், “அரசின் ஆன்மீக சேவையில் அமைச்சர் சேகர்பாபு ‘புயல் பாபு’ போல சுழன்று வேலை செய்கிறார்” என அவர் பாராட்டினார்.
பத்திரிகை கார்ட்டூன்களுக்கு கடும் விமர்சனம்
“நான் காவடி எடுத்ததும், அமைச்சர்கள் அழகு குத்தியதையும் வைத்து ஒரு வார இதழ் கார்ட்டூன் போட்டிருக்கிறது. அதைப் பார்த்து சிரிப்பு வரவில்லை… பரிதாபமாக இருந்தது. இது பல ஆண்டுகளாக உள்ள வன்மத்தின் வெளிப்பாடு,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
“இப்படிப்பட்ட கார்ட்டூன்கள் எங்களை பாதிக்காது. நம்முடைய ஆன்மீக பணியை உண்மையான பக்தர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலின் கடைசி வார்த்தை…
“என் மீதும், அரசு மீதும் வரும் விமர்சனங்கள் எனக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கின்றன. அதனால்தான் நான் என் பணியை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கிறேன்,” என உறுதியுடன் பேசினார்.