இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
தங்கள் மண்ணில் களம் இறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். பூம்ராவைத் தவிர அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸர்க்கும் அனுப்பினர். அந்த அணியின் மன்ரோ, வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார்.அதன் பிறகு வந்த கோலி மற்றும் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து 99 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் 56 ரன்களில் அவுட் ஆக அடுத்ததாகக் களத்துக்கு வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதற்கிடையில் கோலி 45 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்.
அதன் பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி நேரத்தில் அதிரடியில் இறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மனிஷ் பாண்டேவும் ஸ்கோரை உயர்த்தும் அளவுக்கு விளையாடினார். இதனால் இந்திய அணி இலக்கை 19 ஓவர்களில் 204 ரன்கள் இலக்கை எட்டியது. கடைசி வரை அவ்ட் ஆகாமல் 58 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.