இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய நாட்டு மக்கள் போரை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தை தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய போலீசார் போராட்டம் நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அதன்பின், போலீஸார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ரஷ்ய மக்களின் இந்த போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ்வை ரஷ்யா இன்று தாக்கக்கூடும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே கூறி இருந்தார். அதே போல் தற்போது ரஷ்ய ராணுவ வீரர்கள் தலைநகர் கீவ்-வை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் -வில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கீவ் ராணுவத்தளத்தை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.