தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!!
சென்னையில் உள்ள பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனம் 2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, ஏ.ஆர்.டி. போன்ற நிதி நிறுவனங்களின் வரிசையில் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனம் மோசடி செய்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இரு இடங்களிலும் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை சிவசக்திவேல் என்பவர் நடத்தி வந்தார். இவர் முதலீட்டாளர்களிடம், அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அங்கு குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தை முதலீட்டார்களுக்கு பிரித்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
தாங்கள் கொடுக்கும் பணம் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறியுள்ளார்.மேலும் முதலீட்டார்களின் பணத்திற்கு நிலமாகவும் பத்திர பதிவு செய்து அந்த பணத்திற்கும் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனால் ஏராளமான பொதுமக்கள் வட்டிக்கும், நிலத்திற்கும் ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்தனர். தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் டீம் லீடர்களை அமைத்து அந்தந்த மாவட்டகளில் பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளனர்.
3 முதல் 4 நான்கு மாதங்கள் வரை சரியாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுத்து வந்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக எந்த ஒரு தொகையையும் தராமல் இருந்துள்ளனர். இதை பற்றி சிவசக்திவேலிடம் கேட்டபோது வெளிநாடுகளிலிருந்து தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை என்றும், வங்கியில் பிரச்சினையாக உள்ளது என எப்பொழுது அழைத்தாலும் வீடியோ காலில் பேசி நம்ப வைத்துள்ளார்.
சிவசக்திவேல் சில மாதங்களாக போன் மற்றும் வீடியோ கால் எதிலும் பேசாமல் இருந்துள்ளார். அலுவலகத்திலும் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் சிவசக்திவேல் துபாயில் தலைமறைவாகி இருக்கலாம் என முதலீடு செய்தவர்கள் கூறுகின்றனர்.
தாங்களே டீம் லீடராக இருந்தாலும் தங்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், பல கோடி ரூபாய் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளோம் என நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் அசோக் நகரிலுள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகாரளித்தனர். தினமும் இது போன்ற நிறுவனங்களின் மோசடி செய்திகள் வந்தாலும், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் ஏமாந்து கொண்டே உள்ளனர்.