ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

Photo of author

By Parthipan K

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார்.

இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் இணைந்துள்ளன. இதன் மூலம் இந்த முறை ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் களம் காண இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் அணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த முறை வழக்கமாக நடைபெறும் ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள அணிகள் ‘ஏ’ பிரிவு, ‘பி’ பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். அதேபோல் எதிர் பிரிவில் உள்ள தங்களுக்கு நிகரான அணியுடனும் தலா இரண்டு முறை மோதும். மீதி உள்ள நான்கு அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த முறை லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் மட்டும் நடைபெற இருக்கின்றன. அதன்படி மும்பையில் உள்ள மூன்று மைதானங்களில் லீக் சுற்றின் 55 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. எனினும் பிளே-ஆப் மற்றும் இறுதி போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த தேர்வு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.