IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இந்த ஆண்டு போட்டிக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி நான்கு வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் அனைத்து அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்தன. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆகவே, ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகள் அவர்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து மீதமுள்ள வீரர்களில் தேவையான வீரர்களை இந்த இரு அணிகளும் தக்க வைத்து கொண்டனர். எஞ்சிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டார்கள்.
அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் அண்டை நாடு என்கிற அடிப்படையில் மெகா ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறார்கள்.
இந்த ஏலத்தில், அதிகபட்ச அடிப்படை விலை இரண்டு கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 வீரர்களின் பெயர்கள் இருக்கிறது. 1.5 கோடி ஏலப் பிரிவில் 20 வீரர்களும், 1 கோடி ஏலப் பிரிவில் 34 வீரர்களும் இடம்பெற்றுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மீதமுள்ள வீரர்கள் அனைவரும் 50 மற்றும் 20 லட்சம் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.