OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்ததில் இருந்தே ஓபிஎஸ்க்கு பிரச்சனை தொடர்கதையாகி விட்டது என்று கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இது ஓபிஎஸ்க்கு பெரிய அடியாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்வதும், அல்லது ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வெவ்வேறு வேட்பாளரை அறிவித்தனர். ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும், இபிஎஸ் தரப்பினர் தென்னரசுவையும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்தனர். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இந்த பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார். இதனையடுத்து இரட்டை இலை சின்னம் வெற்றி பெற உழைப்போம் என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு தான் தங்களின் ஆதரவு என்றும் ஓபிஎஸ் தரப்பினர் கூறினர். இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பினர் பின்வாங்கியதே ஒரு தோல்வியாக தான் பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் ஒற்றை தலைமையை தான் விரும்புகின்றனர் என்றும் ஓபிஎஸ் வந்தால் கூட கட்சியில் சோ்க்க மாட்டோம் எனவும் முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக கே.பி.முனுசாமி தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக குற்றம் சாட்டி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதேபோல பலரிடம் எம்எல்ஏ சீட்டுக்காக பணம் வாங்கினார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து கே.பி.முனுசாமி அந்த ஆடியோ விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் 1 கோடி ரூபாய் பணம் கேட்டது உண்மை தான். ஆனால் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் அனைவருக்கும் பணம் கொடுத்தார்கள். எனக்கு மட்டும் பணம் கொடுக்கவில்லை. அதனால் தேர்தல் செலவுக்காக எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ 1 கோடி கேட்டேன். அது போல் தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். கடன் கேட்ட பணத்தை நான் லஞ்சம் கேட்டதாக கூறுவது கேவலம். மனசாட்சியே இல்லாமல் இப்போது கிருஷ்ணமூர்த்தி அந்த ஆடியோவை வெளியிட்டிருக்கிறார் என கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அவ்வப்போது ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா என்று பேசப்பட்டு வருகிறது. வேட்பாளரை வாபஸ் பெற்று இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதை தவிர்க்க உதவிய ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் அதிமுகவில் MLA சீட்டுக்கு பணம் வாங்கியதாக அவரது ஆதரவாளர் கே.பி.முனுசாமி மீது விமர்சனம் வைத்தது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று கே.பி.முனுசாமி திட்டவட்டமாக கூறியதால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என எடப்பாடி தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ் தரப்பினர் தங்களால் முடிந்த எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று விரக்தியில் இருக்கின்றனர்.