கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு 75 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் இறப்புக்கு பின் பல சர்ச்சைகள் உள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் அவரது மறைவு தமிழக அரசியலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் செய்த செயல் தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
வி.எஸ். பாபுவின் உடலைத் தனது தோளில் சுமந்த விஜய், பெரம்பூரில் இருந்து திருவிக நகர் மயானம் வரை காலில் செருப்பு அணியாமல் நடந்து சென்றார். சுமார் ஒன்றரை முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் அவர் வெறுங்காலில் நடந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.முன்னதாகவே ரீல்ஸ் ஆட்சி நடைபெறுகிறது என தவெக மீது பல விமர்சனம் உள்ளது.
இதில், ஒருபுறம் விஜய்யின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாவு வீட்டில் செருப்பு இல்லாமல் போவது, போகும் இடமெல்லாம் பூவைத் தூவுவது எல்லாமே ஷூட்டிங் போல இருக்கிறது. காவல்துறையின் செயல்பாடுகளைத் திசைதிருப்ப இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றன” என்று விமர்சித்துள்ளார்.
இதனால் விஜய்யின் இறுதி ஊர்வலச் செயல்பாடே தற்போது அரசியல் சர்ச்சையாகியுள்ளது.
ஏற்கெனவே காலியாக உள்ள தொகுதிகளுடன் கொளத்தூரும் சேர்ந்து இடைத்தேர்தல் நடைபெறயிருக்கும் சூழலில், வி.எஸ். பாபுவின் மறைவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் விஜய் நேரடியாகப் பங்கேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் விஜய்யின் செயலுக்குப் பாராட்டு தெரிவிக்க, மறுபுறம் கீதா ஜீவன் ஷூட்டிங், ரீல்ஸ் என விமர்சித்துள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் தொடங்கிய இந்த அரசியல் விவாதம்,கொளத்தூர் இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா? விஜய்யின் இந்தச் செயலுக்கு மக்கள் தேர்தலில் என்ன பதில் கொடுப்பார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.