பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?
சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார்.
சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார் வீட்டிற்கு செல்லாமல் கோவிலிலேயே தங்கியுள்ளார். இதை கவனித்த நிர்மலா இரவு நேரம் என்பதால் கோவிலில் இருக்கக் கூடாது என்றார்.
அவரின் பேச்சை கொஞ்சம் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் அங்கேயே இருந்துள்ளார். மேலும் நிர்மலா அவரை வலுக்கட்டாயமாக வெளியே செல்லுமாறு மிரட்டினார். அப்போது ஆவேசமடைந்த குமார் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிர்மலா மயக்க நிலையில் கீழே விழுந்தார்.
இதைப் பார்த்த சில கோவில் ஊழியர்கள் கூச்சலிட்ட பின் குமார் அங்கிருந்து தப்பித்து ஓடினார். படுகாயம் அடைந்த நிர்மலாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீராணம் போலீசாரிடம் கோவில் ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.