ஆங்கில மருத்துவத்தால் சித்த மருத்துவம் அழிந்துவிடுமோ என்று நீதிபதிகள் அச்சம்?

Photo of author

By Jayachandiran

மதுரை: 

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த 66 மூலிகைகளை கொண்ட “இம்ப்ரோ” என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளேன். இதனை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவதற்கு முன்பு தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம். பிற நோய்களையும் கட்டுபடுத்தும் சக்தி இந்த மருந்துக்கு உண்டு.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. அந்த வகையில் இம்ப்ரோ மருந்தினை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கொரோனா நோயை குணப்படுத்தக் கூடிய இம்ப்ரோ மருந்தை ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு குறித்தான் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதன்பின்னர் நீதிபதிகள் கூறியதாவது; கொரோனாவால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவரின் மருந்தினை சோதனைக்கு உட்படுத்தாதது ஏன்.?

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இம்ப்ரோ மருந்தை பற்றி சித்த மருத்துவர் மனுவை அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்.? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கில மருத்துவ லாபியால் சித்த மருத்துவமே அழிந்துவிடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று விசாரணையை மறுநாளைக்கு ஒத்தி வைத்தனர்.