ஒரே ஒரு மின்னஞ்சல் தான்! 453 இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள் நிறுவனம்!
இந்தியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக இமெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறது google நிறுவனம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலகப் பொருளாதாரம் 2023 இல் 3-இல் ஒரு பங்கு மந்த நிலையை சந்திக்கும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படியே உலகப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து வருகிறது.
இதையடுத்து பொருளாதார மந்த நிலையின் விளைவாக பெரும் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
உலகெங்கும் உள்ள டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு அதிரடியாக தூக்கி உள்ளது கூகுள் நிறுவனம்.
கடந்த மாதம் 12,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது 453 இந்தியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம்.
அடுத்தடுத்து பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்போது தங்கள் வேலை போகுமோ என்ற பீதியில் ஆழ்ந்துள்ளனர்.