கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”!
ஜாதி, மதபேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவமுடன் வாழ வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 67வது உதய தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலக நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் மறைந்த புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் மக்கள் அனைவரும் ஜாதி, மதம், பேதம் இன்றி சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றார். மேலும் இயேசு, அல்லா, சாமுண்டீஸ்வரி தாயை வேண்டுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் சிவாஜி, இராமராவ், ராஜ்குமார் போன்றவர்கள் நடிப்பால் மக்கள் மனதை வென்றனர் எனவும், புனித் ராஜ்குமார் குறைந்த ஆண்டுகளிலேயே நிறைய சாதனை படைத்துள்ளார் எனவும் அவரது ஆன்மா நம்மைச் சுற்றியே இருக்கும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.