முதல் அமைச்சரை சந்தித்த முக்கிய தலைவர்! தென்னிந்தியாவில் ஏற்படப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்!

Photo of author

By Sakthi

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் நேற்று தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் சந்தித்து பேசி இருக்கின்றார். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வந்த சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சரை சந்திக்க வந்ததாகச் சொல்லப்படுகிறது. தன்னுடைய மனைவி ,மகனுடன் ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திரசேகர் ராவ் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, உள்ளிட்டோரும் வரவேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜகவிற்கு எதிராக இருப்பவர்களை சந்தித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்காக ஒன்றிணைத்து வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் அவர்களை சந்தித்தார். மம்தா பானர்ஜி அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு சில கருத்துக்களையும் தெரிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.

2019 ஆம் வருடத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத மற்றும் பாஜக அல்லாத அரசாங்கத்தை அமைக்க திமுகவின் ஆதரவை பெற சந்திரசேகர் ராவ் மேற்கொண்ட முயற்சி பலன் கொடுக்கவில்லை. ஏனென்றால் திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது 2019ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை மற்ற எவரையும் விட முந்திக்கொண்டு முன்மொழிந்தவர் திமுகவின் தலைவர் ஸ்டாலின்.

தற்சமயம் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் திமுக ஒட்டிக் கொண்டிருந்தாலும் தன்னுடைய முயற்சியை சந்திரசேகரராவ் கைவிடவில்லை என்கிறார்கள். இந்த முறை பாஜகவிற்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், பாஜகவிற்கு எதிராக ஒருங்கிணைந்த தேர்தல் போராட்டத்தை நடத்தவும் சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கோட்டையாக கருதப்பட்ட தெலுங்கானாவில் பாஜகவின் அரசியல் பிரவேசம் காரணமாக, சற்றே யோசித்து கொண்டிருக்கும் சந்திரசேகரராவ் இந்த முறை காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பது குறித்து இன்னும் ஆர்வமாக இருக்கிறாரா? இல்லையா? என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை அவர் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கை கொடுப்பதை பொருட்படுத்தவில்லை என்றால் அவருடைய மாநிலத்தில் டி ஆர் எஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டில் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் செய்து வருகின்றன. இந்த பின்னணியில் இரு முதலமைச்சர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவின் இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு தேசிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் ஒரு முகமாக தெரிந்து வரும் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு சரியான போட்டியை கொடுக்கமாட்டார் என்றும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதியான போட்டியாளர் அவர் இல்லை என்றும், தேசிய அளவில் மேம்போக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த கருத்து ஆணித்தனமாக தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இருக்கக்கூடிய நாடுதழுவிய செல்வாக்கை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதே தேசிய அளவிலான கருத்தாக இருந்து வருகிறது.

ஆகவேதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு தேசிய அளவில் கவனிக்கப்படும் ஒரு மக்கள் தலைவராக இருக்கும் மம்தா பானர்ஜி பாஜகவை எதிர்த்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய அணியை அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.