Kerala Recipe: உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ‘சிறு நெல்லிக்காய்’! இதில் ஊறுகாய் செய்து சாப்பிடுங்கள்!
சிறு நெல்லிக்காயில் (ஸ்டார் நெல்லிக்காய்) உப்பு, மிளகாய் தூள் போட்டு சாப்பிடும் பழக்கத்தை உங்களில் பலர் கொண்டிருப்பர். அதிலும் நெல்லிக்காயை தாளித்து(ஊறுகாய்) சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)சிறு நெல்லிக்காய் – 1 கப்
2)கல் உப்பு – தேவையான அளவு
3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
4)கடுகு – ஒரு தேக்கரண்டி
5)தனி மிளகாய் தூள் – 6 தேக்கரண்டி
6)பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
7)வெந்தயத் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறு நெல்லிக்காயை போட்டு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து ஒரு நாள் இரவு ஊற விடவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும். அதன் பின்னர் பெருங்காயத் தூள் மற்றும் அரைத்த வெந்தயத் தூள் போடவும்.
அதன் பின்னர் ஊற வைத்துள்ள நெல்லிக்காயை போட்டு கிளறவும். பிறகு காரத்திற்காக தனி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த நெல்லிக்காய் ஊறுகாயை நன்கு ஆற விட்டு ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.