Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் “தீயல்” ரெசிபி – மிகவும் சுவையாக செய்வது எப்படி?
Theeyal Recipe: நம்மில் பலர் தினமும் என்ன சமைப்பது என்று தெரியாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம். சிலர் பருப்பு, சட்னி என்று ஒரே மாதிரியான உணவு வகைகளை சாப்பிட்டு அலுத்தவர்களாக இருக்கிறோம்.
நீங்கள் சற்று வித்தியாசமாக தீயல் குழம்பு செய்து பாருங்கள். இவை சமைக்க சுலபமாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீயலில் வெங்காயத் தீயல், உள்ளி தீயல் என பல வகைகள் இருக்கிறது. இந்த தீயல் கேரள மக்களின் பிரியமான உணவு வகைகளில் ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:-
*சின்ன வெங்காயம் – 10
*எண்ணெய் – தேவையான அளவு
*தேங்காய் – ஒரு மூடி
*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
*மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
*புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு
*உளுந்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
*கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கொத்து
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
தீயல் என்னும் வத்தக் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு மூடி தேங்காய் எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயம் சிறிதளவு எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர் அதை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் ஒரு எலுமிச்சம் பழ அளவு புளி போட்டுக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆற விடவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுத்து விடவும்.
பிறகு 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி தூள் மற்றும் 2 தேக்கரண்டி அளவு மிளகாய் தூள் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி, 1/4 தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு, 1/4 தேக்கரண்டி வெந்தயம், 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல், சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி கொள்ளவும். தேங்காய் விழுதின் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இது தான் கேரளர்களின் ஸ்பெஷல் தீயல் குழம்பு ஆகும்.