கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?

0
62
#image_title

கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?

நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் வகைகளில் ஒன்றான மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கின்றது. இதில் மத்தி, நெத்திலி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இதில் முள் இல்லாத மீனை வகையை வைத்து தயாரிக்கப்படும் “தேங்காய் பால் பிஸ் குழம்பு”‘ கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும். இந்த மீன் குழம்பு முறையாக செய்வது எப்படி என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மீன்(முள் இல்லாதது) – 1/2 கிலோ

*தேங்காய் துண்டுகள் – 1/2 கப்

*தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*மிளகு தூள் – 3 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*தக்காளி – 1

*வெங்காயம் – 1

*எலுமிச்சை சாறு – சிறிதளவு

*கருவேப்பிலை – 2 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதில் முள் இல்லாத மீன் 1/2 கிலோ போட்டுக் கொள்ளவும். அடுத்து 3 தேக்கரண்டி மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

அடுத்து அரை மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அந்த அரைத்த தேங்காய் சக்கையை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை மற்றொரு பவுலுக்கு வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

அதாவது முதலில் அரைத்து எடுத்த கெட்டியான பால், அதன் பின் அரைத்த தேங்காய் பால் என இரண்டையும் தனி தனி கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு மண் சட்டி வைத்து அதில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1/4 தேக்கரண்டி கடுகு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அடுத்து இரண்டாவதாக அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் தோசை தவா வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு கொள்ளவும். அடுத்து சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

மீன் பாதி வெந்து வந்ததும் கொதிக்கும் குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து கெட்டியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி விடவும். பிறகு சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் “தேங்காய்பால் பிஸ் குழம்பு” அதிக ருசியுடன் இருக்கும்.