Kerala Style Recipe: ஆப்பிள் மோர் குழம்பு – ருசியாக செய்வது எப்படி?
ஆப்பிள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பல வகைகளில் ஒன்று. இந்த ஆப்பிளுடன் தயிர், தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் மோர் குழம்பு கேரளாவில் மிகவும் பேமஸான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த ஆப்பிள் மோர் குழம்பு சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*ஆப்பிள் – 1
*தேங்காய் துண்டுகள் -1/2 கப்
*தயிர் – 1/4 கப் (புளிப்பில்லாதது)
*மஞ்சள் தூள் – 1 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*பூண்டு – 1 பல்
*சீரகம் – 1 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 2
*கடுகு – 1 தேக்கரண்டி
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*வர மிளகாய் – 2
*கறிவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு ஆப்பிளை எடுத்து தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து 1/2 மூடி தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள் 1/2 கப், சீரகம் 1 தேக்கரண்டி, 1 பல் பூண்டு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அரைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு 1/4 கப் தயிரை கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் வெந்து கொண்டிருக்கும் ஆப்பிள் கலவையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி விடவும். ஆப்பிள் கலவை வெந்து பச்சை வாசனை நீங்கிய பின் அடுப்பை அணைக்கவும்.
இதனை தொடர்ந்து கட்டி இல்லாமல் கலக்கி வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அடுப்பை குறைவான தீயில் வைத்து 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் போட்டு பொரிய விடவும். பின்னர் வர மிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை போட்டு தாளித்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பை செய்து வைத்துள்ள ஆப்பிளை மோர் குழம்பில் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு செய்தால் ஆப்பிள் மோர் குழம்பு அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.