Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் பரங்கி பூசணி புளிப் பச்சடி – செய்வது எப்படி?
உடலுக்கு அதிக சத்துக்களை வழங்கக் கூடிய காய்கறிகளில் பரங்கி, பூசணியும் ஒன்று. இந்த காய்களை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*பரங்கிக்காய் – ஒரு கீற்று
*பூசணி – ஒரு கீற்று
*புளி கரைசல் – 1/2 கப்
*வெல்லம் – சிறிதளவு
*தேங்காய் துருவல் – 1/4 கப்
*பச்சை மிளகாய் – 4
*தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
*கடுகு – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*மஞ்சள் தூள் – சிறிதளவு
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 1 கீற்று பரங்கிக்காய் மற்றும் 1 கீற்று பூசணியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுத்து 4 பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும். காய் கலவையை நன்கு வெந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, வெல்லம், சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1 தேக்கரண்டி அளவு கடுகு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பு கலவையை தயார் செய்து வைத்துள்ள பரங்கி பூசணி புளிப் பச்சடியில் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு செய்தால் பரங்கி பூசணி புளிப் பச்சடி அதிக சுவையுடன் இருக்கும்.