Kerala Style Recipe: “தேங்காய் புட்டு” – இப்படி செய்தால் நிமிடத்தில் தீர்ந்து விடும்!!
நம் அண்டை மாநிலமான கேரளாவில் புட்டு வகைகள் அதிகளவில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டுடன் நேந்திர வாழைப் பழத்தை வைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
தேவையான பொருட்கள்:-
*பச்சரிசி – 1 கப்
*தேங்காய் துருவல் – 1 கப்
*சக்கரை – 1 தேக்கரண்டி
*உப்பு – சிட்டிகை அளவு
*வாழைபழம் – 2
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 கப் பச்சரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். சுமார் 2 மணி நேரம் இந்த பச்சரிசியை ஊற விடவும்.
அடுத்து ஊற வைத்துள்ள பச்சரிசியை களைந்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அடுத்து ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து பச்சரிசியை பரப்பி விடவும்.
இதை 30 நிமிடம் வரை உலர்த்தி பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு ஜல்லடை கொண்டு அரிசி மாவை சலித்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சலித்த மாவு 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். இதை அரிசி மாவில் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் 1 தேக்கரண்டி சர்க்கரை, சிட்டிகை அளவு உப்பு சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும். பின்னர் 3/4 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து 15 ஊற விடவும்.
அடுத்து புட்டு மேக்கர் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் புட்டு மாவை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் 5 நிமிடத்தில் புட்டு ரெடி ஆகிவிடும். பிறகு புட்டு மேக்கர் மூடியில் இருந்து ஆவி வந்த பின் அடுப்பை அணைத்து விடவும்.
அடுத்ததாக தயார் செய்து வைத்துள்ள புட்டை மெதுவாக வெளியில் எடுத்து ஒரு தட்டில் சேர்க்கவும். இந்த தேங்காய் புட்டுக்கு நேந்திர வாழைப்பழம் சிறந்த காமினேஷனாக இருக்கும்.