Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி செய்வது எப்படி?
நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் பஜ்ஜி முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த சுவையான பஜ்ஜியில் வாழைக்காய் பஜ்ஜி, இனிப்பு பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, அப்பள பஜ்ஜி என்று பல வகைகள் இருக்கிறது. இதில் அப்பள பஜ்ஜி கேரளாவில் பேமஸான எண்ணெய் பண்டங்களில் ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:-
*கடலை மாவு – 1 கப்
*தோசை மாவு – 1/4 கப்
*அரிசி மாவு – 1 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – சிறிதளவு
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவு
*உப்பு – தேவையான அளவு
*சமையல் சோடா – சிட்டிகை அளவு
*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
*உளுந்து அப்பளம் – தேவையான அளவு
கேரளா அப்பள பஜ்ஜி செய்யும் முறை…
ஒரு பவுலில் 1 கப் கடலை மாவு, 1/4 கப் தோசை மாவு, 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும். பின்னர் சிட்டிகை அளவு சமையல் சோடா, சிட்டிகை அளவு பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
இந்த பஜ்ஜி உளுந்து அப்பளத்தில் பண்ணும்போது தான் அதிக சுவையுடன் இருக்கும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒவ்வொரு அப்பளமாக போட்டு பிரட்டி எண்ணெயில் போடவும்.
அப்பளம் இரு புறமும் வெந்து வந்ததும் எண்ணெயில் இருந்து வடித்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு ஒவ்வொரு அப்பளத்தையும் பஜ்ஜி மாவில் தடவி எண்ணெயில் போட்டு எடுக்கவும். இந்த அப்பள பஜ்ஜிக்கு சட்னி வகை சிறந்த காமினேஷனாக இருக்கும்.