Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘நெத்திலி தோரன்’ ரெசிபி செய்யும் முறை!!
தமிழ்நாட்டில் நெத்திலி என்று அழைக்கப்படும் மீன் வகை கேரளாவில் நெத்தோலி, கொழுவா என்று அழைக்கப்படுகிறது. இந்த நெத்திலி மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டிகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெத்திலி மீனை வைத்து செய்யப்படும் அவியல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். இதை நெத்திலி தோரன் என்று கேரளா மக்கள் அழைக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:-
*நெத்திலி மீன் – 1 கப்
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 2 கொத்து
*உப்பு – தேவையான அளவு
*சின்ன வெங்காயம் – ஒரு கப்(நறுக்கியது)
*மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் தேங்காய் துருவல், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, 2 கொத்து கருவேப்பிலை, ஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அதன் பின் சுத்தம் செய்து வைத்துள்ள 1 கப் நெத்திலி மீனை அதில் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
5 முதல் 7 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த முறையில் நெத்திலி தோரன் செய்தால் சுவையாக இருக்கும்.