Kerala Style Recipe: நேந்திரம் பழத்தில் தித்திப்பு சுவையில் ஜாம் – செய்வது எப்படி?
அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் நேந்திர வாழை ஜாம் அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை தேங்காய் பால், வாழைப்பழம், வெல்லம், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஜாம் வகை ஆகும்.
தேவையான பொருட்கள்:
*நேந்திரம் பழம் – இரண்டு (நன்கு கனிந்தது)
*வெல்லம் – 1 கப்
*நெய் – 1/4 கப்
*தேங்காய் பால் – சிறிதளவு
செய்முறை:
நேந்திரம் பழம் ஜாம் செய்ய முதலில் நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.
அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் 1 கப் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் நெய் ஊற்றவும். அவை சூடானதும் அரைத்து வைத்துள்ள நேந்திர வாழை விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை ஊற்றி கலந்து விடவும். நேந்திர வாழைக் கலவை நன்கு வெந்து வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் ஊற்றி கலந்து விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த நேந்திர வாழை ஜாம் ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த முறையில் ஜாம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.