கேரளா ஸ்வீட்: ஆரோக்கியம் நிறைந்த “பச்சரிசி பருப்பு லட்டு”! இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!
நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்று லட்டு. இதில் பூந்தி லட்டு, ரவா லட்டு, ராகி லட்டு, வேர்க்கடலை லட்டு என்று பல வகைகள் இருக்கிறது. எந்த லட்டாக இருந்தாலும் மணமும், சுவையும் நம்மை சுண்டி இழுக்கும். அந்த வகையில் பச்சரிசி பருப்பு லாடு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:-
*பச்சரிசி – 1 கப்
*பாசிப் பருப்பு – 1/4 கப்
*தேங்காய் துருவல் – 1/4 கப்
*பொடித்த வெல்லம் – 1/2 கப்
*நெய் – 1/4 கப்
*சுக்குப்பொடி – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஒரு கப் பச்சரிசி போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து அதே வாணலியில் 1/4 கப் பாசிப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.
இந்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் பொடித்த வெல்லம் சேர்த்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
வெல்லப் பாகை தண்ணீரில் போட்டால் கரையக் கூடாத பதத்திற்கு காய்ச்சவும். அடுத்து அதில் சிறிதளவு சுக்குப்பொடி, தேவையான அளவு நெய் மற்றும் 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் வறுத்து அரைத்து பச்சரிசி + பாசிப்பருப்பு பொடியை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
பிறகு இந்த கலவை சூடாக இருக்கும் பொழுதே கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் பச்சரிசி பருப்பு லாடு மிகவும் சுவையாக இருக்கும்.