“ஏன் அஸ்வினை அணியில் எடுக்கிறார்கள்… ஆச்சர்யமாக உள்ளது” முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து
ஆசியக்கோப்பைக்கான டி 20 அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி முன்னாள் வீரர் கிரண் மோரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி பவுலராக இருந்து வருகிறார். கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில் அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளையே பார்ப்பதை நிறுத்திவிட்டதாக ஒரு போட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார். அதில் “எப்போது ஒருநாள் போட்டிகளில் இருமுனைகளில் இருந்து வெவ்வேறு பந்துகளில் வீசலாம் என்று சொல்லப்பட்டதோ அப்போதே ஒருநாள் கிரிக்கெட் அப்போதே நான் அதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது ஒருநாள் கிரிக்கெட் டி 20 கிரிக்கெட்டின் நீட்சியாகிவிட்டது.” என கூறி இருந்தார்.
இதையடுத்து இப்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே தெரிவித்துள்ள கருத்தில் “எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அணியில் அஷ்வின் எப்படி வர முடியும்?.. ஒவ்வொரு முறையும். கடந்த உலக கோப்பையில் கூட அவர் அணியில் எடுக்கப்பட்டார், பின்னர் விளையாடவில்லை. அவரது ஐபிஎல் சாதனையை பாருங்கள், அது நன்றாக இல்லை. ஷமி அல்லது அக்சர் படேல் ஆகியோரில் ஒருவரை எடுத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அக்சர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனக்கு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் வேண்டும். ஷமி புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். மிடில் ஓவர்கள் மற்றும் ஸ்லாக் ஓவர்களிலும், எடுக்க முடியும்” என்று அவர் கூறினார்.