கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: தனக்கு மனோரீதியாக பிரச்சனை இல்லை எனவும் ஆண் மருத்துவரை எதிர் நோக்கிய நிலையில் பல் மருத்துவர் வந்தனா தாஸ் சிக்கி உயிரிழந்ததாகவும் சிறை அதிகாரிகளிடம் ஆசிரியர் சந்தீப் பேச்சு!
கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சந்தீப் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார்.
கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீபை கைது செய்து பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
இவருக்கு மனரீதியான பிரச்சனை உள்ளதா என பரிசோதனை மேற்கொள்வதற்காக பேரூர்க்கடை அரசு மனநல மையத்தின் மருத்துவர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சந்தீபுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
சந்தீபுக்கு மனரீதியான பிரச்சனை இல்லை என்பதால் அவரை மனநல மையத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் கொலை சம்பவத்தில் அவர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து சிறை அதிகாரி சத்தியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சகஜ நிலையில் இருந்த சந்தீபிடம் சம்பவம் குறித்து விசாரித்தபோது அவர் கூறுகையில், தனது வீட்டருகே உள்ளவர்கள் தன்னை தாக்கக்கூடும் என நினைத்ததால் காவல் துறையினரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு வரவழைத்ததாகவும், போலீசார் வீட்டுக்கு வந்த போது தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக இருந்ததாகவும் போலீசார் திரும்பச் சென்ற பின்பு மீண்டும் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், போலீசார் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்குள்ள ஊழியர்களின் அணுகுமுறை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அவர்களும் தன்னை தாக்குவார்கள் என நினைத்ததால் கத்திரிக்கோலை தன் வசப்படுத்தியதாகவும் ஆண் மருத்துவரை தாக்க வேண்டும் என யோசித்தபோது வந்தனா தாஸ் சிக்கியதாகவும் வந்தனா தாசை கொலை செய்ய வேண்டும் என சிந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், வெளி மாநில தொழிலாளிகளிடம் இருந்து போதை பொருட்கள் வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரது பேச்சில் பெண் மருத்துவரை கொலை செய்தது தொடர்பான குற்ற உணர்வோ அல்லது வருத்தமோ தென்படவில்லை என சிறை அதிகாரிகள் கூறினர். ஆனால், அவரது பேச்சு தனது குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கான திட்டமாக இருக்கலாம் என சிறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.