உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து மாநில அரசுகள் துப்புரவு பணியாளர்களை வைத்து ஊரெங்கும் கிருமி நாசினி தெளித்து வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரவர் வீடுகளை சுத்தம் செய்து மஞ்சள் தெளித்து பசும் சாணத்தால் பூசி மெழுகி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த தெவ்ரியா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான கிஸ்மத் என்ற பெண் தானே களத்தில் இறங்கி துப்புரவு வேலைகளை செய்து வருகிறார். அவர் தனது கிராம மக்களுக்கு கையுறைகளையும் முககவசங்களையும் வழங்கி கொரோனாவில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த பெண்மணி தன் ஊரெங்கும் கிருமிநாசினியை ஸ்பிரேயர் மூலம் தெளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீராமருக்கு அணில் உதவியது போல தானும் அரசாங்கத்திற்கு உதவி செய்வதாக அதில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோ வைரலாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.