Friday, September 20, 2024
Home Blog Page 4969

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட காவிரி தூய்மை,
நீர் மேலாண்மை திட்டம் வரவேற்கத்தக்கவை என்றும் மேலும் காவிரி ஆற்றை தூய்மைபடுத்துவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

மத்திய அரசு நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னோட்டமாக குடியரசுத்தலைவர் உரை அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. மாசுபட்டுக் கிடக்கும் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படுவதைப் போன்று, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் இராம்நாத் அறிவித்தார். மத்திய அரசின் சார்பிலான இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புனித நதிகளில் ஒன்றாக போற்றப்படும் காவிரி ஆறு அண்மைக்காலமாக கர்நாடகத்தின் கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 148.2 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கவிடப்படுவதாக அம்மாநில அமைச்சரே சட்டப்ப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள அனல்மின் நிலையம், கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை, மால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் காவிரியில் தான் கலக்கின்றன. தொடர்ந்து நொய்யலாற்றின் வழியாக சாயப் பட்டறைக் கழிவுகளும், திருச்சி பகுதியில் மாநகராட்சிக் கழிவுகளும் காவிரி ஆற்றில் சங்கமமாகின்றன. அதன் விளைவாக கும்பகோணம் பகுதிக்கு காவிரி நீர் வரும்போது, அதில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குடிநீரைக் குடிக்கும் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு, நரம்பு பாதிப்பு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் புனித ஆறான காவிரியில் நீராடினால் நோய்கள் தீரும் என்றிருந்த நிலைமாறி, இப்போது காவிரியில் குளித்தால் நோய் தான் ஏற்படும் என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக போராடி வருகிறது. காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இது குறித்து கடந்த மக்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்து கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் போன்று காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பயனாகவே காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நீர்வளங்களை பாதுகாப்பதற்காக நீர்மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டால் தமிழக மக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள். அவர்களின் துயரங்கள் ஓரளவாவது தீர்க்கப்படும்.

அதேநேரத்தில் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்து விடக்கூடாது. அவை திட்டங்களாக மாற்றப்பட்டு, அடுத்தமாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் காவிரியை தூய்மையாக்கும் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும். அத்துடன் கோதாவரி & காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதன் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

0

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

அன்புள்ள பாரத பிரதமருக்கும், எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாய் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்கள். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒரு சாதாரண வாக்காளன். கடந்த ஐந்து வருடங்களில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறையாவது எங்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்புகின்றேன் . உங்கள் பதவியேற்பு விழாவே எங்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

இந்தமுறை நீங்கள் டீமானிட்டைஷேஷன் கொண்டு வந்தால் நாங்கள் கவலை கொள்ள மாட்டோம், எங்களிடம் தான் பணமே இல்லையே ! இந்தமுறை நீங்கள் எங்களுக்காய் தந்த வாக்குறுதிகள் கலர் பேப்பர் சுற்றப்பட்டு கவர்ச்சியாய் காத்திருக்கிறது. நடுத்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் கவலையாய் பாத்திருக்கின்றனர் அந்தப் பரிசை. உள்ளிருப்பது புயலா பூகம்பமா எனத் தெரியவில்லை. வேலைவாய்ப்பும், திறன் வளர்ப்பும் முதலில் காத்திருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாய் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போவதாய் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு ? 1990 களில் இருந்து உற்பத்தித்துறை வளர்ச்சிபெறவே இல்லை. பப்புதான் காரணமென்று கைகாட்டாதீர்கள். ஆண்ட அனைவரும் குற்றவாளிகளே. தண்டனை என்னவோ என் போன்ற சாமனியருக்கே. உற்பத்தித்துறைக்கு பதில் சேவைத் துறை வளர்ந்திருக்கிறது. உலகப் பொருட்களை விற்கும் சந்தையாய் பாரதமாதாவை மாற்றிவிட்டீர்கள். மேக் இன் இந்தியா என்று போன தேர்தலுக்குத் தந்த வாக்குறுதியை வசதியாய் மறந்து விட்டு இம்முறையும் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

நீங்கள் இந்தியப் பிரதமர் என தினமும் 100 முறை சொல்லிக் கொள்ளுங்கள். காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் மீட்டிங் என்று உங்கள் உலகம் விரிந்து விட்டதால் பாவம் எங்களைப் பற்றிய நினைவில்லை. அடிச்சோட்றா சின்ராசு என்று உங்கள் வண்டியைக் கொஞ்சம் உள்நாட்டு கிராமங்கள் பக்கம் திருப்புங்கள். சாமானியனின் அன்றாடத் தேவை அன்றைக்கான உணவும் உறைவிடமும் தானே தவிர யோகா டே இல்லை. வயிற்றுக்கு இரண்டு வேளையாவது சோறிட்ட பின் உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யலாம். இல்லையேல் எங்களுக்கு சவாசனம் மட்டுமே சாத்தியம்.

வருடத்திற்கு எத்தனை மருத்துவர்கள் பொறியாளர்கள் கல்லூரியிலிருந்து வெளிவருகிறார்கள் தெரியுமா ? அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறதென்று தெரியுமா ? எங்கள் ஆடு மாடுகளை விற்று மனைவியின் கடைசி கிராம் தங்கத்தைக் கூட விற்று ஸ்விக்கியில் வேலை செய்யவா படிக்க வைத்தோம். உங்களின் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் பதில் சொல்லுங்கள்.

அன்புள்ள எதிர்கட்சியினரே ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தோம் தெரியுமா ? நீங்கள் உத்தமர் என்று அர்த்தமல்ல. உங்கள் கரங்களும் கறை படிந்த வையே. அலைக்கற்றை ஊழல், தேர்தலில் பிடிபட்ட பணம் என்று எதையும் மறக்கவில்லை நாங்கள். இந்த வாய்ப்பு கடைசியாய் திருத்திக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பு. தமிழில் உறுதி மொழி ஏற்கலாம், ஆனால் தமிழ் வாழ தமிழனும் வாழவேண்டுமல்லவா ? பத்து தலைமுறைக்கும் தேவையான சொத்து சேர்த்து விட்டீர்கள் இன்னும் நிறையவில்லை . காலியாய் இருப்பது எங்கள் வயிறும் தான். நினைவிருக்கட்டும்.

இந்தமுறை பத்து சதவீத வாக்குகள் மற்றுமோர் கட்சிக்கு சென்றுவிட்டதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டளித்தவர் அனைவரும் முதல்முறை வாக்களித்தவர் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் . எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்க்கட்சிதானே ஒழிய எதிரிக் கட்சி அல்ல.

இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சி. இதை நினைவில் வைத்து நல்லாட்சி தருவீர்கள் என்று காத்திருக்கும் ஓர் சாமானியன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா?

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா?

நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை சந்திக்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

டேவிட் வார்னர் (281 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (343 ரன்), ஸ்டீவன் சுமித் (243 ரன்) ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க் எதிரணியினரை மிரட்டுகிறார்கள்.

வங்காளதேச அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் ‘வேட்டு’ வைக்கும் நம்பிக்கையுடன் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. 2 சதம், 2 அரைசதம் உள்பட 384 ரன்கள் குவித்துள்ள ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தான் அந்த அணியின் முக்கியமானவராக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டவுன்டானில் நடந்த ஆட்டத்தில் 322 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்த வங்காளதேச அணி ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சு தாக்குதலை திறம்பட சமாளித்து அசத்தியது. ஆனால் இது அதைவிட பெரிய மைதானம் என்பதால் ஷாட்பிட்ச் பந்து வீச்சை எதிர்கொள்வதில் கூடுதல் கவனமுடன் இருப்பார்கள்.

மொத்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் சவால் அளிக்க காத்திருப்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் அல்லது ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர்-நிலே, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் அல்லது நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் நாட்டிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்காற்று வீசும். லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த மைதானத்தில் நடக்கவிருந்த இந்தியா நியுசிலாந்து இடையேயான போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது இந்நிலையில் இன்றும் மழை வர வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிப்பதால் ஆஸ்திரேலியா-வங்காளதேச போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. எந்த இடையூறும் இல்லாமல் போட்டி நடைபெற்றால் வங்காள தேச அணி வகுத்துள்ள வியூகம் கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

#உலககோப்பை2019 #கிரிக்கெட் #ஆஸ்திரேலியா #வங்களாதேசம் 

உலக கோப்பை கிரிக்கெட் |ஆஸ்திரேலியா |வங்காளதேசம்

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

0

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது.  கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய 30% கேளிக்கை வரியை இந்த  திரையரங்க நிர்வாகமானது  செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது.

 இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் கேளிக்கை வரி 30 லட்சம் ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறி தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து ஒரே நாளில் ஐந்து திரையரங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரையரங்கு உரிமையாளா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மட்டுமின்றி சேலம் வந்து செல்லும் வெளியூர் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்காக விளங்கிய இந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கூறுகையில், “மாநகராட்சி தரப்பில் திரையரங்க நிா்வாகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திரையரங்க நிா்வாகம் இதனை கவனத்தில் கொள்ளாததால் ஐந்து திரையரங்குகளுக்கு  இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தது.

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

0

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றியை பறித்தது மற்றும் தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் தடுத்தது என திமுகவிற்கு பாமக தொடர் சோதனைகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கடந்த காலத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியில் தொடர உதவியது குறித்து பழைய நினைவுளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில்
தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு!
என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

பழைய செய்தி தான் -இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என ஆரம்பிக்கும் அந்த பதிவில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

2006-11 காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சொற்றொடர் மைனாரிட்டி ஆட்சி என்பதாகும். திமுக அரசு பற்றி அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பேசும் போதெல்லாம் மைனாரிட்டி அரசு என்றே விளிப்பார். இது திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனாலும், அவரது அரசு ஐந்தாண்டுகள் தாக்குபிடித்தது. அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு தான்.

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுகவுக்கு 22 இடங்கள் தேவைப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 34 இடங்களிலும், பா.ம.க. 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆதரவளித்தால் தான் திமுக ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை. ஆனால், மத்திய அரசில் திமுகவுக்கு நாங்கள் அமைச்சர் பதவி கொடுத்ததைப் போல நீங்களும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அரசுக்கு ஆதரவளிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், அமைச்சரவையில் யாருக்கும் பங்கு தர திமுக தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் திமுகவுக்கு பா.ம.க. கை கொடுத்தது. 2006 தேர்தலில் கலைஞரை முதலமைச்சராக்குவோம் என்று கூறி தான் கூட்டணிக்கு வாக்கு கேட்டோம், எனவே திமுகவை ஆட்சியில் அமர்த்துவது தான் சரி என்ற எண்ணத்துடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தேன். அதற்கான ஆதரவு கடிதத்தையும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ஆளுனரிடம் அளித்தனர். அதனால் வேறு வழியின்றி காங்கிரசும் நிபந்தனையின்றி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது.

ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுகவுக்கும், பா.மகவுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அணியிலிருந்து பா.ம.க. விலகிய போதிலும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.

திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்ததால் பா.ம.க. மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர கோபம் ஏற்பட்டது. ‘‘நீங்கள் மட்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு சில அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் தான் அதை கெடுத்து விட்டீர்கள். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு கிடைப்பதையும் தடுத்து விட்டீர்களே நியாயமா?’’ என சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர். ஆனாலும் பா.ம.க. அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த போதிலும், அதன் தவறுகளை சுட்டிக்காட்ட பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியதே இல்லை. அந்தக் காலத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். அந்தக் காலத்தில் திமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆக…. கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக உண்மையாக போராடுவதாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

0

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அவர்களுக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைதட்டி அவரை வரவேற்றனர். 

இன்று மக்களவையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் பதவியேற்றனர். அப்போது 38 எம்பிக்களும் தமிழில் உரையாற்றி பதவியேற்றனர். இவர்களது பதவியேற்பு உரையின் இறுதியில் திமுக கூட்டணியை சேர்ந்த எம்.பிகள் ‘’வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்றும் முழக்கமிட்டனர். இது போலவே பெரியார் வாழ்க என்று பலரும் தளபதி வாழ்க என்று சிலரும் உரையாற்றினர். அப்போது பாரத் மாதாகி ஜே என முழக்கமிட்டு ஒவ்வொருவருக்கும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி உரையின் போது இறுதியில் பெரியார் வாழ்க எனக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான தேனி தொகுதி எம்பியான ஓ பி எஸ் மகன் ஓ.பி.ரவிந்தரநாத் குமார் பதவியேற்றார். அவர் பதவியேற்ற போது அவரின் பதவி பிரமாணத்தின் இறுதியில், “வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என மட்டும் கூறினார். ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பெயரையும், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கூறுவதை தவிர்த்து விட்டு வந்தேமாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். இதனால், பாஜக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி ஆரவாரமாக உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

திமுக கூட்டணியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருந்தாலும் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறிவிட்டனர். ஆனால் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் தனி ஒருவனாக பாஜக ஆதரவுடன் கெத்தாக பதவியேற்று தனக்கு பின்னால் பாஜக உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

0

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

மழை பெய்யும் நாட்களில் சென்னை மூழ்குவதும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தில் சென்னை தவிப்பதும் காலம் காலமாய்த் தொடர்வது . 2015 வெள்ளத்தின் போது இன்னும் பத்தாண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது என்றனர் . நான்காம் ஆண்டே வீதியெங்கும் காலிக் குடங்கள் போராட்டங்கள் .

பள்ளிக்கூடங்கள் முழு வேலை நாளை அரைநாளாய்க் குறைத்துவிட்டன… கைகழுவதற்கும் கழிப்பறை பயன்பாட்டிற்கும் போதுமான நீர் இல்லை . உணவகங்கள் மதிய உணவை நிறுத்தி விட்டன . டிபன் வகைகளை விட சாதம் சாம்பார் ரசம் கூட்டு என்று நீர்ப் பயன்பாடு அதிகமாய் இருப்பதே இதற்குக் காரணம் . ஐடி ஊழியர்கள் வேண்டுமானால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் , மற்ற அலுவலகங்கள் என்ன செய்வது ? மருத்துவமனைகளின் நிலையோ இன்னும் கவலைக்கிடம் . தீர்வுதான் என்ன?

சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் அமைச்சர் வேலுமணி . தன் வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்பதைத்தான் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று கூறி விட்டாரோ ?

மழையில் வெள்ளத்திலும் கோடையில் பஞ்சத்திலும் அவதியுறுவதுதான் சென்னை மக்களின் தலைஎழுத்தா ? ஆட்சியாளர்களின் சுட்டுவிரல்கள் அமைதியாய் நீள்கின்றன இயற்கையை நோக்கி …இது நிஜமா ? கடந்த வருடம் மழை இல்லாததுதான் இப்பஞ்சத்திற்கு காரணமா ? இல்லை ஆளும் அரசின் திட்டமற்ற நீர்மேலாண்மையா ? செல்வி ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்கிறதா ? அரசின் அனுமதி பெற்று கட்டப்படும் எல்லா கட்டங்களிலும் இருக்கிறதா ??? கண்காணிப்பது யார் ? கஷ்டப்படுவது யார்?

சென்னையில் சென்ற வருடம் பெய்த மழையின் அளவு 800 மில்லி மீட்டர் . பெங்களூருவின் மழை அளவு 860 மிமீ . 60 மிமீ வித்தியாசம் இரண்டு நகரங்களிடையே , ஆனால் பெங்களூருவில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் சென்னையில் மட்டும் எப்படி ? வருடத்திற்கு வெறும் 600 மிமீ மழை பெறும் இராஜஸ்தானில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் 3600 ஏரிகளை கொண்ட சென்னை மாநகரில் மட்டும் எப்படி ?

ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை விட்டுவிடலாம் இருக்கும் ஏரிகள் ஒழுங்காக தூர் வாரப்படுகிறதா ? குவாரிகளிலில் இருக்கும் நீர் ஏன் ஏரிகளில் இல்லை ? ஒவ்வொரு ஆண்டும் தூர்வார மராமத்துப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகள் எங்கு செல்கின்றன?

2015 ல் 300 டிஎம்சி அளவு பெய்த நீரில் பாதி கடலில் கலந்ததாதவே இருக்கட்டும் , மீதித் தண்ணீரை ஏரிகளிலும் குளங்களிலும் சரியானபடி சேமித்திருந்தால் இந்தப் பஞ்சம் வந்திருக்காதே . சென்னையில் மட்டும் 70 கோவில் குளங்கள் உள்ளன. இதோ மழைக்காலம் நெருங்குகிறது . அதற்கு முன் இக்குளங்களும் ஏரிகளும் ஏட்டில் இல்லாமல் உண்மையிலேயே தூர்வாரப்பட்டால் மட்டுமே , ஒவ்வொருவரும் தன் வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி சேமித்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு நீர் இருக்கும் . அரசின் மெத்தனம் களையப்பட வேண்டும் , உடனடித் தீர்வாய் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மட்டும் மெட்ரோ லாரிகளில் நாள் ஒன்றிற்கு 900 லாரிகள் தண்ணீர் பெறப்படுகிறது . நாம் அழிந்தது மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் அழிக்க ஆரம்பித்து விட்டோம் .

அரசின் நீர் மேலாண்மை, ஏரிகள் குளங்கள் சீரமைப்பு பாதுகாப்பு , மறுசுழற்சி முறை , மழைநீர் சேமிப்பு . நம் அட்சய பாத்திரம் நிரம்பியே இருக்கிறது ஆனால் நாம் ஓட்டைக் குடங்களையே நாடுகிறோம் .

அரசின் பங்களிப்பு மட்டும் போதாது ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையுணர்ந்து இருக்கும் நீரை சிக்கனமாய் செலவழித்தும் இனி வரும் தலைமுறைக்காய் நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பும் செய்ய வேண்டும் . அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டாய நீர் மறுசுழற்சி இருந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலை வர வேண்டும் . குற்றாவாளிகள் என கை காட்ட ஆரம்பித்தால் தமிழ் நாட்டை ஆண்ட , ஆளும் அனைவரும் தான் . இது தான் வழியென்றறிந்த பின் பின்பற்றத் தயக்கமென்ன … தமிழ்நாட்டு மக்களே செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ?

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

0

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஆந்திரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்ரெட்டி தலைமையிலான புதிய அரசு, இப்போதுள்ள மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறது. அளவில் சிறிய, நிர்வாகத்தில் சிறந்த மாவட்டங்கள் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்தவை என்ற கொள்கையின்படி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதை பா.ம.க. முழு மனதுடன் வரவேற்கிறது.

சிறியவையே அழகு (Small is Beautiful) என்ற கொள்கையில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க. நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய மாவட்டங்கள் எதுவும் உருவாக்கப் படாத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். வேலூர் உள்ளிட்ட பெரிய மாவட்டங்களையும் இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று ஆந்திரத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு, அம்மாநிலத்தில் இப்போதுள்ள 13 மாவட்டங்களை மறுவரையறை செய்து 26 மாவட்டங்களை உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திரத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே. ஆனால், மக்களவைத் தொகுதிகளை விட கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படவுள்ளது. ஆந்திரத்தின் மொத்த மக்கள்தொகை 4.93 கோடி ஆகும். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 19 லட்சமாக இருக்கும்.

ஆந்திரத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் மாவட்டங்களை மறுவரையறை செய்வதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு அந்த மாநிலம் உருவாக்கப்பட்டபோது 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவற்றைப் பிரித்து மொத்தம் 31 மாவட்டங்களை சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு உருவாக்கியிருக்கிறது. அம்மாநிலத்தில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 11.29 லட்சம் பேர் மட்டும் தான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தெலுங்கானாவில் 2 மாவட்டங்களில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி தான் இருக்கும் என்பதிலிருந்தே அந்த மாவட்டங்கள் எவ்வளவு சிறியவை என்பதை உணர முடியும்.

தெலுங்கானா மாநிலம் ஆந்திரத்துடன் இணைந்து இருந்த போது எட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் இப்போது அதிவேக வளர்ச்சியை எட்டி வருகிறது. இதற்கு ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டது முதல் காரணம் என்றால், தெலுங்கானாவின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது இரண்டாவது முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்போது ஆந்திரத்திலும் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் மூலம் அம்மாநிலமும் அதிவிரைவான வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

தமிழகத்திலும் பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதன் மூலம், அந்த மாவட்டங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதை உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் சராசரியாக 22 லட்சம் பேர் உள்ளனர். வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு செல்ல 200 கி.மீ தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாவட்டங்கள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகவும் பெரியவையாக உள்ளன. இவற்றை நிர்வகிப்பதும், இந்த மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் மிகவும் கடினமானதாகும். இது வளர்ச்சிக்கு உதவாது.

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் சில மாவட்டங்களை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. அதனால் தான் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும்; அவற்றின் மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். அவ்வகையில் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியது சரியான திசையில் எடுக்கப்பட்ட மிகச்சரியான நடவடிக்கை ஆகும். அதன்பின்னர் வேலூர் மாவட்டத்தை பிரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான போதிலும், புதிய மாவட்டங்கள் குறித்து தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.

சிறிய மாவட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே, புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தின் மாவட்டங்களை 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுவரையறை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

0

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

கடந்த கால திமுகவின் ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் உதவியுடன் பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து மக்களவை தேர்தலில் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்ற திமுகவிற்கு இந்த விசாரணை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த கால திமுகவின் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக 2006-2007ஆம் ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த கூட்டுறவு வங்கியின் கிளைகளில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் வரை திமுகவினர் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் அது குறித்து தீவிர விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் போரூர், திருவொற்றியூர், பல்லாவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில், பொதுமக்களின் சேமிப்பு நிதி, நிரந்தர வைப்பு நிதி, நகைக்கடன், மகளிர் மேம்பாட்டு நிதியில் இருந்து திமுகவினர் ஊழல் செய்து தங்களது வழக்கமான கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது

இந்த ஊழலால் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப்பணம், பங்கு லாபத்தொகை வழங்க முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் வங்கிக்கிளைகள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன.

திமுகவினரின் இந்த மெகா ஊழல் தொடர்பாக, சிறப்பு அதிகாரியின் தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரித்தது. அதில் 2010 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி, 333 பக்கங்கள் கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கையை விசாரணைக்குழு தாக்கல் செய்தது. இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் உண்மைகளை கண்டறிய சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது

இவ்வாறு ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவணங்களை மாற்றி அமைத்தல் போன்ற திமுகவினரின் செயல்களால் மக்களின் பணத்தை பறிகொடுத்த மத்திய கூட்டுறவு வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் உள்ளவர்களுக்கு வட்டித்தொகை மற்றும் லாபத்தொகை ஆகியவை செலுத்த முடியாமல் பெரும் சிக்கலில் இந்த வங்கிகள் உள்ளன.

கடந்த காலங்களில் திமுகவினர் என்ன ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தாலும் தங்களிடம் உள்ள ஊடக பலத்தால் தேர்தல் நேரங்களில் அவற்றையெல்லாம் மறைத்து ஆளும் கட்சியினரை பற்றிய குறைகளை மட்டுமே பேசி வெற்றி பெற்று விட்டனர் என்று இது குறித்து மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

0

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

சென்னையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வரும் வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாகுறையால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்கவும் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பாமக நிறுவனர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்து மழை பெய்யும் வரை தண்ணீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பில்லை. எனினும், நிலைமையை சமாளிக்க சென்னையில் ஒவ்வொரு நாளும் 12,000 வாகனங்கள் மூலம் 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், சில இடங்களில் மக்கள் இரவு நேரங்களில் தண்ணீருக்காக காத்திருப்பது, நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பது உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட, தண்ணீர் பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அதேபோல், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தண்ணீருக்கான தவிப்பு என்பது மிகக் கொடுமையானது ஆகும். அதேநேரத்தில் இதற்காக இயற்கையை குறை கூற முடியாது. இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீர் வளத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நமது தவறு தான். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும்.

தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது. பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் களத்தில் நின்று தூர்வாரியிருக்கிறோம். ‘‘நீர் ஆதாரங்களை பராமரிக்கும் நோக்குடன் ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திருவிழா நடத்தி, ஏரி – குளங்களை தூர்வார வேண்டும்; ஒரு வீட்டின் தண்ணீர் அடுத்த வீட்டுக்கும், ஓர் ஊரின் தண்ணீர் அடுத்த ஊருக்கும் செல்லாத அளவுக்கு மழைநீர் வடிகால்கள் வலிமையாக கட்டமைக்கப்பட வேண்டும்’’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாதது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும். பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை சிறப்பு விருந்தினராக கொண்டு நீர்வள மேலாண்மைக்கான மாநாட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடத்தியது. அதில் மழைநீர் சேமிப்புக்கான திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.

தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.

வழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை. 95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும்.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.