சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!!
மக்களிடையே இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் யூடியூப் சேனல்களில், வேலை வாய்ப்பு, சினிமா, அரசியல், ஆன்மிகம், சமையல், ஆரோக்கியம், காமெடி என பல்வேறு தளங்களில், பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளது. மக்களும் பொழுது போக்கிற்காக இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த வீடியோக்கள் ஆரம்பிக்கும் போதே “லைக் போடுங்க, ஷேர் பண்ணுங்க” என்பது தான் வீடியோ செய்பவர்களின் முதல் வாசகமாக இருக்கிறது.
இந்த “லைக் போடுங்க” மூலம் புதிய மோசடி ஒன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. ஆன்லைன் மூலம் பலவிதமான மோசடிகள் நடைபெறுகிறது. தங்களுடைய வங்கி கணக்கு எண் தெரிவிக்கும்படி, தங்களுக்கு பரிசுத்தொகை வந்துள்ளது அதற்கு பணம் கட்டவேண்டும் என மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு இருந்தாலும் புதிய விதமாக மோசடிகள் நடக்கும் போது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
யூடியூப் சேனல் மூலம் நடந்த புது விதமான மோசடி என்னவென்றால், அந்த மோசடி கும்பல் முதலில் அவர்களுடைய யூடியூப் சேனலின் லிங்கை செல்போனுக்கு அனுப்பி வைக்கிறது. அந்த லிங்கை லைக் செய்தால் ஒரு தொகை உங்களுக்கு கிடைக்கும் என கூறுகிறது. ஒரு லைக் தானே என்று பலரும் லைக் செய்துள்ளனர். பிறகு டெலிகிராம் குரூப் ஆரம்பித்து லைக் செய்தவர்களின் பெயர்களை இணைத்துள்ளனர். பிறகு அவர்களிடம் உங்களை குரூப் லீடராக தேர்வு செய்து இருக்கிறோம்.
இந்த குரூப்பில் பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியிருக்கின்றனர். முதலில் குறைந்த அளவே பணத்தை கட்ட சொல்லியிருக்கிறார்கள். குறைந்த தொகை என்பதனால் பலரும் பணத்தை கட்டியுள்ளனர். இந்த பணத்திற்கான வட்டியையும் அந்த மோசடி கும்பல் சரியாக கொடுத்திருக்கிறது. முதலில் பணத்தை சரியாக கொடுத்த காரணத்தினால், பலரும் மேலும் பெரிய தொகைகளை கட்டி ஏமாந்துள்ளனர்.
அதிகமான தொகை கிடைத்தவுடன் அனைவரையும் ஏமாற்றி பணத்தை சுருட்டியுள்ளது இந்த மோசடி கும்பல். இந்த மோசடியில் தொழிலதிபர்களும், என்ஜினியர்களும் பணத்தை இழந்துள்ளனர். இதில் என்ஜினியர் ஒருவர் 30 லட்ச ரூபாயும், தொழிலதிபர் 1 கோடிக்கும் மேல் கட்டி ஏமாந்து இருப்பதாக தெரிகிறது. பலரும் கடன் வாங்கி இதில் பணத்தை கட்டியுள்ளனர் எனவும், இதுவரை 35 பேர் புகார் அளித்ததில், 5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால் புகார் தெரிவிக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.