வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது. இது போன்று, ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அனைத்து சிங்கங்களையும் பூங்கா அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தினருடன் பூங்கா அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, சிங்கங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் வழங்கப்பட்டன. தொற்று பாதிப்புக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய தேசிய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போபாலில் உள்ள ICAR-NIHSAD என்ற ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர்கள் குழு பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்த குழுவினர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தடுப்பு நடவடிக்கையாக விலங்குகளை கையாளும் பணியாளர்கள் உரிய மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து உயிரியல் பூங்காக்களிலும், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நேற்று முன்தினம் விலங்குகளை கையாளும் 61% பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
விலங்குகளிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் நுண்ணுயிரியின் மரபணுவினை வகைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் LaCONES-CCMB என்ற ஆய்வகம் விலங்குகளுக்கு அளிப்பது குறித்து அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மேலும், தேசிய அளவில் உள்ள துறை வல்லுநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.