ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!

0
80
sputnik v
sputnik v

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்க அனுமதிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு  அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தது.

இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவின் தொற்றுநோய்வியல் மற்றும் நுண்ணுயிரியலின் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பூனேவில் உள்ள ஹடாப்ஸர் மையத்தில் சீரம் நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.

அதே நேரத்தில், தொழில்நுட்பட பரிமாற்றம், மூலப்பொருட்கள் இறக்குமதி போன்றவற்றுக்கான ஒப்பந்த நகலை வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.