வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!

Photo of author

By Savitha

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!

Savitha

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம். குடிமகன்களால் காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் கலவரமாக மாறும் அவலம். பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ளது காமேஸ்வரம் மீனவ கிராமம் உள்ளது.அங்குள்ள கிராமத்ததின் சவுக்கு மற்றும் முந்திரி காடுகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மகளிர் சுய உதவி குழுவினர் பலமுறை கீழையூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளத்தனமாக விற்கப்படும் பாண்டிசாராயம் மற்றும் மதுபானங்களால் கிராமத்திலுள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்பாக செல்ல முடியவில்லை என கூறி இன்று காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்து வந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்த பெண்கள், முந்திரி காடுகளில் கள்ளத்தனமாக விற்கப்படும் சாராயத்தை அருந்திவிட்டு வரும் இளைஞர்கள் மற்றும் குடிமகன்களால் தங்களது காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கலவரமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் சாராய விற்பனை குறித்து காவல் நிலையத்தில் பெண்கள் புகார் தெரிவித்தால், அதனை போலீசார் சாராய வியாபாரிகளிடம் தெரிவித்து தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.