கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புது 500 மற்றும் 2000 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.ஆனால் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டில் அதிகம் புழக்கத்தில் இருந்த இந்த 2000 ரூபாய் நோட்டுகள் நாளடைவில் மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்தது.
இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை சில ஆண்டுகளுக்கு முன் ரிசா்வ் வங்கி நிறுத்தியது.இந்நிலையில் கடந்த மே 19 அன்று ரிசா்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் மக்கள் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும் அதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் தெரிவித்தது.
மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து 100,200,500 உள்ளிட்ட நோட்டுகளாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை என்று ரிசர்வ் பேங்க் அறிவித்தது.
இந்நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93%
அதாவது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதில் 87 சதவீத 2000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய 13% நோட்டுகள் வங்கிகளில் கொடுக்கப்பட்டு ரூ.100, ரூ.500 மாற்றப்பட்டுள்ளன என்று ரிசா்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.அதேசமயம் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற செப்டம்பர் 30க்கு பிறகு செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.