சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அருகே பெரிய கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன். இவரது மனைவி சியாமளா, இத்தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீதேவி. அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சம்பத்தை கைது செய்ய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவியின் தாயார் சியாமளா விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, சிறுமியின் உடலை மீட்டு போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து கொலை செய்யப்பட்டு விட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.