சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு! வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!

Photo of author

By Rupa

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு! வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!

தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலக இளநிலை தொலை தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் முனியாண்டி. இவர், பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்குப் பேசி வருவதாக தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர்.
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர் (40) ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் (27) தேனியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் அங்கு பி.எஸ்.என்.எல் அலைக்கற்றையை சட்டவிரோதமாக அவர்கள் வைத்திருக்கும் தொலை தொடர்பு இணைப்பு சாதனம் (டிவைஸ்) மூலமாக மூன்று மாதங்களாக பல்வேறு நாடுகளுக்குப் பேசியுள்ளனர்.
சுமார் 32 சிம் கார்டுகள் வரை பொருத்தப்படும் ஒரு டிவைஸில் நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி அந்த டிவைஸ்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் சாதாரண அழைப்பாகவே இருக்கும்.‌ மேலும் யாருக்கு, எங்கிருந்து தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் ஏதும் இந்த டிவைஸ்களில் கண்டறிய முடியாது.‌ இவ்வாறு கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளால் பி‌.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் சஜீர், முகமது ஆசிப் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பி.எஸ்.என்.எல் தரப்பில் விசாரித்தோம். “பி.எஸ்.என்.எல் சேவையில் வெளிநாடுகளுக்குப் பேசக்கூடிய ஐ.எஸ்.டி சேவை குறியீட்டுக்கான சிக்னல் கடந்த 4 மாதங்களாக அதிகரித்தது. சராசரியாக மூன்றாயிரம் என்ற கணக்கிலிருந்த சிக்னல் அளவு, ஆறாயிரம் வரை சென்றது. இது மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாகனது. இதனால்தான் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் எங்கள் இயக்குநரிடம் புகார் அளித்தோம். அவர்கள் மத்தியப் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த ஆய்வில், தேனி-பெரியகுளம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்திலிருந்து அலைக்கற்றையை மாற்றி பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இவர்கள் மொத்தம் 31 டிவைஸ்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் 14 டிவைஸ்கள் செயல்பாட்டில் இருந்துள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 992 சிம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளுக்கு மாற்றிக் கொடுப்பது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால், இவர்கள் தீவிரவாத சதிச்செயல் ஈடுபட முயன்றனரா அல்லது ஆன்லைன் மோசடிக்கான செயலா என்பதை முழுமையாக விசாரித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.