மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மூடப்பட்ட மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டிலை சிறுவன் திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் தினமும் குடிபழக்கம் கொண்ட மதுப்பிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
வருகிற ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு தொடரும் என்கிற காரணத்தால் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மது விற்பனை இல்லாத காரணத்தால் கள்ளச் சாராயத்தை சிலர் தேட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள மதுபான கடையின் சுவரை துளையிட்டு மதுவை திருட முயன்ற சிறுவன் சிக்கியுள்ளான். மேலும் திருடும் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்று வந்துள்ளான். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தரப்பட்டதை தொடர்ந்து, சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். பின்னர் எவ்வாறு திருட்டு நடந்தது என்பதை செயல்முறையாக நடித்துக் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.
வேலையின்மை காரணமாக பலர் தேவையற்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு காவல்துறையில் சிக்கிக் கொள்வது தொடர்ந்து வருகிறது.
மேலும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. ஆம்பூர் அருகே நாயக்கனேரி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். ஊரடங்கு உத்தரவின் போதும் பல்வேறு சட்டவிரோத செயல்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.