மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்!
வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தளுக்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவ்வப்பொழுது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் 28 கட்சிகளும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 303 இடங்களை தட்டி தூக்கிய பாஜக, காங்கிரஸை மண்ணை கவ்வச் செய்தது.
ஆனால் வரவுள்ள மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது பாஜகவிற்கு அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக உடன் கை கோர்த்து நின்ற பலம் வாய்ந்த கட்சிகள் தற்பொழுது கூட்டணியில் இருந்து விலகி விட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் மேலிட பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
இதனால் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தொகுதியை வெல்வது என்பதே பாஜகவிற்கு கடும் போராட்டமாகத் தான் இருக்கும்.
வட இந்தியாவில் பாஜக பெரிய கட்சியாக திகழ்ந்தாலும் தென் இந்தியாவில் அதன் பருப்பு வெந்த பாடில்லை. அதுமட்டும் இன்றி வட இந்தியாவில் டெல்லி, பிகார், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக சற்று வலிமை இழந்த கட்சியாகவே இருந்து வருகிறது.
பிகார், மஹாராஷ்டிராவை ஆட்சி செய்து வரும் மாநில கட்சிகள் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டு காங்கிரஸுடன் கூட்டணி போட்டுள்ளதால் பாஜக தனித்து களம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாஜக எதிர்ப்பு அலை வீசும் தமிழகம், பிகார், மஹாராஷ்டிராவில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்து வந்த பாஜக தற்பொழுது கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளின் மாநிலங்களில் அதிக இடத்தில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கு.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மணிப்பூர் வன்முறை சம்பவத்தின் தாக்கம் மக்களவை தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.
வியூகப்படி மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் கிட்டத்தட்ட 3/4 வாசி தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 1/4 வாசிக்கும் குறைவான தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் குறித்த பலம் சொல்லும்படியாக இல்லை.
தமிழகத்தில் பாமக, தேமுதிக, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் 39 தொகுதிகளில் 33 அல்லது 34 இடங்களில் போட்டியிடும்.
தென் இந்தியாவில் கர்நாடகாவை தவிர்த்து பிற மாநிலங்களில் பாஜக வெற்றி என்பது எட்டா கனியாகவே இருந்து வருவதால் இங்கு அவர்களின் திட்டம் நிறைவேற வாய்ப்பு மிக மிக குறைவு. ஓரளவிற்கு செல்வாக்கு உள்ள கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் பாஜகவிற்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
காங்கிரஸை பொறுத்தவரை கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகளை கொண்டிருந்தாலும் பாஜகவை போல் பெரும்பாலான இடங்களில் போட்டி இட முடியாது. கூட்டணி கட்சிகள் கேட்கின்ற சீட்களை ஒதுக்கி தான் ஆக வேண்டும். தாங்கள் விரும்பும் தொகுதியில் காங்கிரஸால் போட்டியிட முடியாமல் போகும். தற்பொழுது உள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வரை கழண்டு கொள்ளாமல் இருந்தால் 300 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதுமட்டும் இன்றி வரவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இது காங்கிரஸுக்கு பிளஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இன்றி கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு சற்று ஓங்கிய படி தான் இருக்கின்றது.
இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு சற்று பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. திமுக அமைச்சர்களின் பண மோசடி, ஊழல், கொள்ளை ஒவ்வொன்றாக வெளி வருவதால் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு வெற்றி கிடைப்பது என்பது பெரும் சவலாகத் தான் இருக்கும்.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்டு பணிகளில் கோட்டை விட்ட திமுக அரசு மீது மக்கள் கோபத்துடன் இருக்கின்றனர். அதற்கு முன் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு சொதப்பல்களை ஏற்படுத்தி தமிழக பெண்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கின்றது. இப்படி திமுகவின் மீதான விமர்சனம் அதிகரித்து வருவதால் இதன் தாக்கம் மக்களவை தேர்தலில் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, இந்தி திணிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து கழண்டு காங்கிரஸுடன் கூட்டணி போட்டுள்ள கட்சிகள் மீண்டும் பாஜகவுடன் சேர வாய்ப்பு இருக்கின்றது. காங்கிரஸை காட்டிலும் பாஜக சற்று பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதினால் வருகின்ற மக்களவை தேர்தல் இரு கட்சிகளுக்கும் கடும் சவாலாகவே இருக்கும். வட மாநிலங்களில் பாஜக மற்றும் தென் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.