கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம்
சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இவர் தற்போது அவருடைய நண்பருடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக வருது கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் அவர் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதில் சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக அவர் குடித்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.