டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !
ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பைக் கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதரைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். அவரைப் பிழைக்க வைப்பது கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்திருந்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆனால் ஒரு வினோதமான பாம்புக் கடி சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது. கூலித் தொழிலாளியான இவர் தன் வீட்டின் வெளியே நின்ற கட்டுவிரியன் பாம்பை அடிக்க முயன்றுள்ளார். அப்போது பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு சேதுவிற்கு முதலுதவி மட்டும் அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், அவரிடம் உங்களைக் கடித்தது என்ன வகைப் பாம்பு எனத் தெரியுமா எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அருகில் இருந்த பையில் கைவிட்டு கட்டுவிரியன் பாம்பையே எடுத்துக் காட்டியுள்ளார். பாம்பை பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும் அலறியடித்து ஓட, மருத்துவமனையே பரபரப்பானது. அதன் பின் அவர் அது இறந்த பாம்பு என சொன்ன பிறகே அவர்கள் சமாதானமாகி அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.