‘சுறா படத்தில் எதுக்கு பா நடிச்ச’ எனக்கேட்ட மனோபாலா..குமுறிய விஜய்!
தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோதான் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பலரும் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கலாய்த்து தள்ளினார்கள். ஆனால் இன்று மிகப்பெரிய ஸ்டார் நடிகராகவும் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும் உருவெடுத்துள்ளார் விஜய்.
முதலில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் தான் விஜய் என்று கூறிய ரசிகர்கள் தற்போது தளபதி விஜயின் அப்பா தான் எஸ் ஏ சந்திரசேகர் என்று கூறும் அளவுக்கு தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். தனது 10 வயதில் குழந்தை நடிகராக தோன்றி 18 வயதில் கதாநாயகனாக மாறி ரசிகர்கள் பலரும் தங்களின் வீட்டில் ஒருவராக விஜயை போற்றும் அளவிற்கு தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, குஷி, கில்லி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இடையிடையில் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் அதனை அடுத்த படத்தில் பூர்த்தி செய்து விடுவார்.
அதுபோல தான் விஜய் தனது 50வது படமான சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்த இந்த படத்தை எஸ்பி ராஜகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் விஜய்க்கு பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதுகுறித்து மறைந்த நடிகர் மனோபாலா விஜயிடம் சுறா படத்தில் எதுக்குப்பா நடிச்ச? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய், “படத்தைப் பற்றி கூறும் போது எனக்கு பிடித்திருந்தது அதனால் ஒப்புக்கொண்டேன். ஆனால் கடைசியில் இப்படி ஆயிருச்சு” என்று புலம்பியதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகர் மனோபாலா விஜயுடன் இணைந்து மின்சார கண்ணா, வேட்டைக்காரன், நண்பன், தெறி, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மனோபாலாவுடன் நெருங்கி பழகுவாராம். பல விஷயங்களை மனோபாலாவிடம் விஜய் பகிர்ந்து கொள்வாராம். விஜய் தன்னை அண்ணன் என்று தான் அழைப்பார் என்று மனோபாலா பல இடங்களில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.