DMK MDMK: 2026 சட்டமன்றத் தேர்தல் தொடங்கிய கணமே வெற்றி வாகை யாருக்கென தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பாரா வகையில் தனது முதல் தேர்தலிலேயே தவெக, தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டியது. தேர்தலுக்கு முன் விஜய், கூட்டணிக்காக பல புதிய அறிவிப்பை வெளியிட்டும் யாரும் அவரை நாடவில்லை. ஆனால் தேர்தலில் முடிவை கண்டு தற்சமயம் பலரும் கட்சித் தாவி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் பதவியில் விஜய் உட்கார வேண்டுமென்றால் பெரும்பான்மையை நிரூபிப்பது கட்டாயம். இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு கொடுத்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திமுக-விலிருந்து விலகி தவெக கட்சியில் இணைந்து விட்டோம் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. அந்தவகையில் காங்கிரஸை தவிர்த்து, தோழமையை விடாமல் தொடர் திமுகவுடன் தற்போதுவரை அவர்களது கூட்டணியில் தான் உள்ளனர். இப்படி இருக்கையில் திமுக-வின் இடது சாரிகள் எண்ணம் நாள்பட மாறிக்கொண்டே வருவதையும் பார்க்கவும் முடிகிறது.
அந்த வரிசையில் மதிமுக தனது பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, மதிமுக சின்னத்தில் போட்டியிட விடாமல், அவர்களது சின்னத்தில் போட்டியிட கட்டாயமாக்கியது தான் இதன் சர்ச்சைக்கு காரணம். இறுதி வரை ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டுக் கொள்கிறோம் என்று கேட்டதற்கு கூட திமுக தலைமை ஒத்துப்போகவில்லை. அவர்களின் இந்த நிலைப்பாட்டை குறித்து துரை வைகோ தனது ஆதங்கத்தை அக்கணமே வெளிப்படையாகவும் பேசினார்.
ஓர் அங்கீகாரம் பெற்ற கட்சி,தங்களின் கட்சி சின்னத்தை விட்டு கூட்டணி தலைமை கட்சியின் கீழ் இருந்தால் மதிமுக என்ற ஒன்று இருந்ததே தெரியாமல் அழிந்துவிடும். இதனால் மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், திமுக கட்சியை விட்டு விலகுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறி வருகின்றனர்.

