`மெட்ராஸ்’ இன்னும் எதற்கு? தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்றுங்கள் – விஜய் அரசுக்கு சி.வி.சண்முகம் வைத்த கோரிக்கை!

தமிழ்நாடு என மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பிறகும், உயர்நீதிமன்றம் மட்டும் இன்னும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்' என்ற பெயரிலேயே தொடர்வது ஏன் என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், அதனை தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்ற விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, எரிசக்தி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம், உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்ற விவகாரத்தை மீண்டும் சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு முன்பு மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சி.வி.சண்முகம், மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் உயர்நீதிமன்றத்தின் பெயரில் மட்டும் `மெட்ராஸ்’ தொடர்ந்து இருப்பதாக குறிப்பிட்டார். கேரளா, ஆந்திரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பெயர்களிலேயே உயர்நீதிமன்றங்கள் அழைக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பழைய பெயர் தொடர்வதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இந்த விவகாரம் தற்போது புதிதாக எழுப்பப்படும் கோரிக்கை அல்ல என்பதையும் சி.வி.சண்முகம் தனது பேச்சில் நினைவுபடுத்தினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதே உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசிடம் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்' என்பதை சென்னை உயர்நீதிமன்றம்’ என மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும், அதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றம் வரை சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயர் தொடர்பாக எழுந்த விவகாரங்களைத் தொடர்ந்து அந்த முயற்சி முழுமை பெறாமல் போனதாக சி.வி.சண்முகம் விளக்கினார்.

அதன்பிறகு ஜெயலலிதா தலைமையிலான அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம்' என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்றே பெயர் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் பல ஆண்டுகள் கடந்தும் அந்தக் கோரிக்கை நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் சட்டப்பேரவையில் பதிவு செய்தார்.

இந்த நிலையில்தான் தற்போது விஜய் தலைமையிலான அரசிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருக்கிறார் சி.வி.சண்முகம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றுவதற்கான நடவடிக்கையை இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தனது பேச்சின்போது விஜய் தலைமையிலான அரசை `வெற்றி ஆட்சி’ என குறிப்பிட்டு அவர் வைத்த கோரிக்கையும் பேரவையில் கவனம் பெற்றது.

இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான மேலும் இரண்டு கோரிக்கைகளையும் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் முன்வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி வளாகத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சிலையை கவனிப்பதோடு நிறுத்தாமல், தினசரி பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசால் அதனை செய்ய முடியவில்லை என்றால் அதிமுகவிடம் அந்தப் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். உயர்கல்வி வளாகத்தில் ஒன்பது அடி உயரத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சுமார் ரூ.60 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.

அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பேசிய சி.வி.சண்முகம், அந்த இடத்தை லேடி வில்லிங்டன் வளாகம்' என குறிப்பிடுவதற்கும் ஆட்சேபம் தெரிவித்தார். அந்த வளாகத்திற்கு ஏற்கெனவே ஜெ.ஜெயலலிதா வளாகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பான மற்றொரு கோரிக்கையையும் முன்வைத்தார். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் எளிய குடும்ப மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் பின்னர் செயல்படாமல் போனதை குறிப்பிட்ட அவர், அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒரே நாளில் உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றம் தொடங்கி ஜெயலலிதா சிலை பராமரிப்பு, ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது வரை அடுத்தடுத்து கோரிக்கைகளை முன்வைத்த சி.வி.சண்முகத்தின் சட்டப்பேரவை பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

குறிப்பாக பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் உயர்நீதிமன்ற பெயர் மாற்ற விவகாரத்தை மீண்டும் சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம், பந்து தற்போது விஜய் அரசின் பக்கம் சென்றிருக்கிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை `தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என மாற்ற சிறப்பு தீர்மானத்தை விஜய் அரசு கொண்டு வருமா என்பதுதான் அடுத்த கேள்வி!