ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டியில் இந்தியாவின் ராமன் சர்மா அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீனா நாட்டில் ஹாங்க்சோவ் நகரில் நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையுடன் அதாவது அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பாக 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று(அக்டோபர்27) நடைபெற்ற ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 1500 மீட்டர் டி38 பிரிவில் இந்தியாவை சேர்ந்த ராமன் சர்மா அவர்கள் 1500 மீட்டர் தொலைவை 4.20.80 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இதன் மூலமாக ராமன் சர்மா அவர்கள் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதே போல ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் எஸ்.ஹெச்.6 பிரிவில் இந்தியாவை சேர்ந்த கிருஷ்ணா நாகர் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதே போல பெண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஷீத்தல் தேவி அவர்கள் தங்கம் வென்று அசத்தினார்.
அதே போல பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரமோத் பகத் அவர்கள் எஸ்.எல் 3 பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மேலும் பேட்மிண்டன் பிரிவில் எஸ்.எல் 6 பிரிவில் இந்தியாவை சேர்ந்த நிதேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதையடுத்து பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என்று மொத்தமாக 82 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 393 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 32 தங்கப் பதக்கங்களை வென்று ஈரான் இரண்டாவது இடத்திலும் 30 தங்கப் பதக்கங்களை வென்று ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.